குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி - பொதுமக்கள் அச்சம்!
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியில் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்குவது அவ்வப்போது நடைபெறுகிறது. மேலும், இரவு நேரத்தில் மட்டும் வந்துகொண்டிருந்த வன விலங்குகள் தற்போது பகல் நேரங்களிலும் வெளியே வரத்தொடங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் பகுதியில் கரடி ஒன்று நேற்று உலா வந்தது. அந்த கரடி நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னரே அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அடந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.