முகேஷ் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் நிகில் மேஸ்வானி!
நிகில் மேஸ்வானி ரிலையன்ஸ் குழுமத்து நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபராக உள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம் 1966-ஆம் ஆண்டு திருபாய் அம்பானியால் நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
ஜவுளி ஆலையில் இருந்து தொடங்கிய பயணம் பெட்ரோகெமிக்கல் மற்றும் சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு வரை பரவியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் லட்சக்கணக்கான ஊழியர்களில், அம்பானி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான மற்றும் நம்பிக்கையான சிலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நிகில் மேஸ்வானி. இவர் கெமிக்கல் இன்ஜினியர் பட்டதாரி ஆவார்.
நிகில் ஆர் மேஸ்வானி ரிலையன்ஸின் நிறுவனர் இயக்குனர்களில் ஒருவரான ரசிக்லால் மேஸ்வானி என்பவரின் மகன் ஆவார். 1986 இல், நிகில் மேஸ்வானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தனது பயணத்தைத் தொடங்கினார். ஜூலை 1988 இல் அவர் முழு நேர இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். ரிலையன்ஸ் வாரியத்தில் நிகில் மேஸ்வானியும் உள்ளார்.
நிகில் மேஸ்வானி மும்பை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியலில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகத்தை நடத்தும் பொறுப்பை நிகில் மேஸ்வானியிடம் கொடுத்துள்ளார்.
இவரே ரிலையன்ஸ் குழுமத்து நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபர். நிகில் மேஸ்வானிக்கு வழங்கப்படும் ஊதியமானது சுமார் ரூ. 24 கோடி. அதே சமயம் முகேஷ் அம்பானியின் சம்பளம் 2008-09 முதல் 15 கோடி ரூபாயாக நிலையானதாக உள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதுடன், அதன் முதலீட்டிலும் பல எண்ணிக்கையிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.