பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை...
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழ்நாட்டின் 5 இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள், திருவல்லிக்கேணி பகுதியில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
மார்ச் 1-ந் தேதி பெங்களுருவில் செயல்பட்டு வரும் தோசை ஸ்பெஷல் பிரபல உணவகமான பெங்களூரு குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், துரதிருஷ்டவமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் சிசிடிவி புட்டேஜ் மூலம், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் தெரிய வந்தது. மேலும், குண்டு வைத்த குற்றவாளி அணிந்திருந்த தொப்பி, சென்னை மயிலாப்பூரில் வாங்கப்பட்டது என்றும், குண்டு வைத்த பயங்கரவாதிகள், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்து சதி திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வைத்து சென்ற நபர் மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் நபர், கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் சதிச்செயலில் ஈடுபட்டதாக முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என தெரியவந்துள்ளது. இருவரும் அப்போதே தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்து இருந்தது தெரியவந்தது.
தற்போது இவர்கள், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்த னர்.
அதில் முஸவீர் ஹூசைன் ஷாகிப் அணிந்து இருந்த தொப்பி மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு மாலில் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டருது. இருவரும் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து கேரளா வழியாக தமிழகம் வந்து பிறகு சென்னை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்றதாக விசாரணை மூலம் உறுதியாகியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் இன்று மீண்டும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர்.