நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – 4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக சுமார் 4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்!
இதையடுத்து, கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் மணிமுத்தாறு அருவியில் தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் நிறைவுற்ற பின்னரும் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை மணிமுத்தாறு அருவி குறித்தும், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப செல்வது குறித்தும் நியூஸ்7 தமிழ் செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில் வனத்துறையினர் தற்போது மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, தொடர்ந்து நாளை (26.06.2024) முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.