For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி - பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை!

09:45 PM May 16, 2024 IST | Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி   பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு இருப்பதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக அதற்கான நடவடிக்கையை அரசு அலுவலர்கள் எடுத்துள்ளனர். 

Advertisement

நடுத்தர மக்களின் கஷ்டத்தை கருத்தில்கொண்டு வெளிச்சந்தைகளைவிட, நியாய விலைக்கடைகளில் தமிழ்நாடு அரசால் எண்ணெய், பருப்புகள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இந்த பருப்பு, எண்ணெயானது இந்த மாதம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கு, தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால்தான் வழங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த தட்டுப்பாடு குறித்தும், மக்களின் தேவை குறித்தும் நியூஸ்7 தமிழ் நேற்று செய்தி ஒளிபரப்பியது. இந்த செய்தியின் எதிரொலியாக, அரசு அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, மே மாதத்திற்கான துவரம் பருப்பு, எண்ணெய் பாக்கெட்டுகள் அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மே 2024 மாதத்திற்குரிய தேவையான 20,000 மெ.டன் துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி இந்திய தேர்தல் ஆணைய 18.04.2024 தேதிய ஒப்புதலின்படி 20.04.2024 அன்று கோரப்பட்டு 02.05.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 04.05.2024 அன்று விலைப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களுடன் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

விலைக்குறைப்பு பேச்சுவார்த்தையில் நியாயமான விலை கிடைக்கப்பெற்றதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம் பருப்பு விநியோகிப்பாளர்கள் நால்வருக்கும், பாமாயில் விநியோகிப்பாளர்கள் மூவருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு நாளது தேதி வரை நடப்பு மே மாதத்திற்கு விநியோகிப்பதற்காக நியாய விலைக் கடைகளுக்கு 5,405 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 31.19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே 2024 மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

Tags :
Advertisement