வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் - தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!
மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலுடன் கூடிய கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அரசு அதிகாரிகள், மீட்புப் படையினரின் தொடர் முயற்சியால், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பின. இன்னும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், அதனை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும், அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் நியூஸ்7 தமிழ் அன்பு பாலமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.
சென்னை திருவான்மியூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு, ரூ.5,000 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை, சத்யசாய் எம்ஜிஆர் பவுண்டேஷனுடன் இணைந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் வழங்கி உதவியது. இதனை சத்யசாய் எம்ஜிஆர் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் ராஜகோபால் பாலாஜி வழங்கினார்.
இதையும் படியுங்கள் : பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில், பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 27 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஸ்பெல் பவுண்ட் விசுவல் எஃபெக்ட் அண்ட் அனிமேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் வழங்கியது.
சென்னை கொட்டிவாக்கத்தில் 10 குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான 17 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கர்னல் பென்னிகுவிக் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் வழங்கியது.