நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவி!
தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவினர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது. சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் குழுவினர் வெள்ளம் சூழந்த பகுதியில் வீடுகளில் சிக்கியுள்ளோருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவினர்.
மேலும் படகில் சென்று 17 நபர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலத்தை சேர்ந்தோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.