நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி - மாஞ்சோலை தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மலை கிராம மக்கள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று பிபிடிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழ்நாடு அரசின் சார்பில் சார்ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் ஆகியோர் இணைந்த குழுவினர் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் தேயிலைத் தோட்ட நிர்வாகம் எடுத்து நடத்த வேண்டும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் உள்ள இடங்களை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஐந்து ஏக்கர் வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் மலை கிராமத்திலிருந்து வேறு பகுதிக்கு சென்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மறுவாழ்விற்கான தொகையாக வழங்க வேண்டும் எனவும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.