பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
20 அணிகள் பங்கேற்றும் விளையாடி வரும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த 2-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 போட்டிகளுக்கு இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய எட்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 17) நள்ளிரவு நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
பப்புவா நியூ கினியா அணியின் வீரர்களான சாா்லஸ் அமினி 17 ரன்களும், நாா்மன் வனுவா 14 ரன்களும், சேசே பாவ் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். இவர்களை அடுத்து ஆடிய அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
இந்த அணியில் அதிகபட்சமாக டெவன் கான்வே 35 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்களும், டேரில் மிட்செல் 19 ரன்களும் எடுத்தனர். பப்புவா நியூ கினியா அணி சார்பில் கபுவா மோரியா 2 விக்கெட்டுகளையும், செமோ கமியா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லக்கி பெர்குசன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை வீசினால் அது மெய்டன் ஓவராக கருதப்படும். அந்தவகையில் பெர்குசன் வீசிய 4 ஓவர்களில், அதாவது 24 பந்துகளில் பப்புவா நியூ கினியா அணி வீரர்கள் ஒரு ஓட்டம் கூட பெறவில்லை. வீசிய 4 ஓவர்களையும் பெர்குசன் மெய்டன் ஓவராக வீசியதோடு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.