நேரு பிறந்தநாள் - டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை...
நேரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்த அவர் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார்.
அவர் 1964 ஆம் ஆண்டு மே 27 அன்று காலமானார். நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ரோஜாவின் ராஜாவான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் உள்பட பல மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மாநிலங்களிலும் காங்கிரசார் நேருவின் போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்கே, “இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்று நவீன இந்தியாவை உருவாக்கிய பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். ஜனநாயகத்தின் மிகச்சிறந்த பாதுகாவலராக திகழ்ந்தவர். அவரது முற்போக்கு சிந்தனைகள் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், நாட்டு மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல், எப்போதும் ஒன்றாக வாழ ஊக்குவித்தவர் ஜவஹர்லால் நேரு.” என்று தெரிவித்துள்ளார்.