புத்தாண்டை முன்னிட்டு தட்கல் முன்பதிவு நேரத்தில் IRCTC செயலிழப்பு!
புத்தாண்டை முன்னிட்டு IRCTC தளத்தில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு நேரத்தில் செயலிழந்ததால் பயணிகள் வேதனையடைந்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் இன்று காலை நீண்ட நேரமாக IRCTC செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.
ஆனால், IRCTC வலைதளம் செயலிழந்ததால் பயணிகளால் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் 3வது முறையாக தட்கல் முன்பதிவு நேரத்தில் IRCTC தளம் செயலிழந்துள்ளது. கடந்த டிசம்பர் 9-ம் தேதி தட்கல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரமாக IRCTC வலைதளம் பராமரிப்புப் பணியில் இருந்தது. அதேபோல், டிசம்பர் 26-ம் தேதி வலைதளம் மற்றும் செல்போன் செயலி இரண்டும் ஒன்றரை மணிநேரமாக பராமரிப்புப் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.