புத்தாண்டு கொண்டாட்டம் - புதுச்சேரி, ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களுக்கு தடை
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி, ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
இதன் காரணமாக நாளை ஒயிட் டவுன் பகுதியில் உள்ள கடற்கரை சாலைக்கு அனைவரும் புத்தாண்டு கொண்டாட வருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒயிட் டவுன் பகுதியில் செஞ்சி சாலைக்கு கிழக்கே உள்ள டுமாஸ் வீதி, விக்டர் சிமோனல் வீதி, ரோமன் ரோலண்டு வீதி, சுயிப்ரேன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 3 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செஞ்சி சாலைக்கு வடக்கே உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும், தெற்கே இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் மற்றும் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியிலும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலைக்கு நடந்து செல்ல அறிவுறுத்தல்.
மருத்துவமனைக்கு செல்பவர்கள், குடியிருப்பு வாசிகள், விடுதிகளின் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் மூன்று வகையான பாஸ் வழங்கப்பட்டு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒயிட் டவுன் பகுதியில் நாளை போக்குவரத்து போலீசாருடன் 100 தன்னார்வலர்களும் கூடுதலாக போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.