DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் - மத்திய அரசு அறிவிப்பு!
டீப்ஃபேக் விவகாரம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய புதியதாக இணையதளம் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
டீப்ஃபேக் (DeepFake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான முறையில் வீடியோ, புகைப்படங்களில் ஒரு நபரை தவறாக சித்தரிப்பது அல்லது ஆள்மாறாட்டம் செய்வதாகும். சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தவறாக சித்தரித்து போலி வீடியோக்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:
"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் டீப்ஃபேக் போன்ற செயலிகள், இணையத்தை பயன்படுத்தும் 120 கோடி இந்தியர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, டீப் ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள், போலி தகவல்கள் பரவுதல் போன்றவற்றை கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும். தவறான தொழில்நுட்பங்களை கொண்டு சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.