சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்று - பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்றின் காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
சீனாவில் பரவி வரும் 'ஹெச்என்2' பறவைக் காய்ச்சல் மற்றும் வடக்கு சீனாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசப் பிரச்னையைக் கருத்தில்கொண்டு சுகாதாரத் தயார் நிலையை ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுவாசப் பிரச்னைகளையும் பலர் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்தப் புதிய நோய் பாதிப்புகள்
குறித்து சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டது.
அதற்கு, 'சுவாச நோய்த்தொற்று அதிகரிப்புக்கும் காய்ச்சலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்கு புதிய வைரஸ் எதுவும் காரணமில்லை. ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க்
கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்கள்தான் அதிகரித்துள்ளன' என்று சீனா விளக்கமளித்தது.
இந்த நிலையில் இந்த புதிய நோய் தொற்று குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தலில், 'சீனாவில் 'ஹெச்9என்2' பறவைக் காய்ச்சல் பரவல் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் சுவாசப் பிரச்னைக்கு உள்ளாகியிருப்பதைக் கருத்தில்கொண்டு மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்து மற்றும் தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன், நோய்த் தடுப்பு மருந்துகள், பாதுகாப்புக் கவச உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் ஆகிய வசதிகளை உறுதிப்படுத்துதல், நோய்க் கட்டுப்பாட்டு நடைமுறைகளின் செயல்பாடு போன்ற பொது சுகாதாரத் தயார்நிலையை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆய்வு செய்ய வேண்டும். நிகழாண்டு தொடக்கத்தில், கொரோனா பெருந்தொற்றுக்காக பகிரப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் பரவும் நோய்த்தொற்றின் போக்கு குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அந்தத் தகவல்கள் மத்திய அரசின் வலைதளத்தில் உடனடியாகப் பதிவேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.