சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு காவல்துறை விசாரணையின் போது தாக்கியதில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து விசாரணையின் போது போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் என 9 பேரை கொலை வழக்கில் சிபிஐ கைது செய்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 105 சாட்சிகளில் 52 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கலாம் என நீதிமன்றத்தில் சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து 52 பேரிடம் தற்போது வரை சாட்சிய விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணை நடைபெற்றது
அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், ”இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் சாட்சியாக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன், எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும் மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன், இந்த வழக்கில் அப்ரூவல் ஆக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து சிபிஐ பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.