For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொதுமக்களின் கவனம் ஈர்க்க அரசியல் கட்சிகளின் "நூதன" போராட்டங்கள்!

01:44 PM Feb 08, 2024 IST | Web Editor
பொதுமக்களின் கவனம் ஈர்க்க அரசியல் கட்சிகளின்  நூதன  போராட்டங்கள்
Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அரசியல் களத்தில் அனல் கிளம்பியுள்ளது.  ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க,  எதிர் அணியை குறிவைத்துத் தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. அந்த வகையில்,  மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மற்றும் ஆளுங்கட்சிக்கு இடையே யுத்தம் இப்போதே தொடங்கியுள்ளது.  மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக,  அரசியல் கட்சிகள் நூதன முறைகளை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

Advertisement

அல்வா வழங்கி போராட்டம்: 

அதன் ஒருபகுதியாக நூதன முறையில்,  போராட்டங்களை கட்சிகள் நடத்தி வருகின்றன. இன்று மாநில அரசுக்கு உரிய நிதிப் பகிர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி மத்திய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கி திமுகவினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.  சென்னை கிளாம்பாக்கம் மற்றும் திருநெல்வேலியில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.  பொதுமக்களுக்கு திமுகவினர் வழங்கிய அல்வா பாக்கெட்டுகளில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று குறிப்பிடும் வகையில் Zero என எழுதப்பட்டிருந்தது. 

முன்னதாக,  கடந்த வாரம்,  தூத்துக்குடி மாவட்ட மழை பாதிப்புக்கு நிவாரண நிதி கிடைக்க வேண்டி வேம்படி இசக்கியம்மன் ஆலயத்தில் மனு அளித்து கோரிக்கை வைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்,  அங்கிருந்த பக்தர்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டா வரச் சொல்லுங்க: 

திமுகவை பொறுத்த வரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கூடுதலாக மக்கள் நீதி மய்யம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில்,  அதிமுகவும்,  பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தனித்தனியாக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தேமுதிக,  பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக அணிக்குச் செல்லுமா? அல்லது  பாஜக அணிக்குச் செல்லுமா? என்பது இன்னும் சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.  அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் வேலைகளைத் தொடங்கியுள்ளன. கட்சிகளின் விளம்பர டீம்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

அந்தவகையில்,  அதிமுக சார்பில் கடந்த வாரம் ஒரு போஸ்டர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.  திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 'கண்டா வரச் சொல்லுங்க' என்று அதிமுகவினர் போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டினர்.  மேலும், சமூக வலைதளங்களிலும் போஸ்டர்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோல் கவனம் ஈர்த்த சில போராட்டங்களை தற்போது பார்ப்போம்: 

குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை; தாமரை மலரை விட்டு போராட்டம்: 

புதுச்சேரியை சேர்ந்தவர் சுத்தம் சுந்தர்ராஜன் என்பவர் சமூக ஆர்வலராக இருக்கும் நிலையில் இவர் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அவ்வப்போது சில நூதனமான முறையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.  அவரது போராட்டத்திற்கு அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி தீர்த்து வைப்பார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலை முழுவதும் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.  மழையால் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.  இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.  ஒரு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டன.

இதனை அரசுக்கு தெரியபடுத்தும் வகையில் கடலூர்- புதுச்சேரி சாலை மரப்பாலம் சந்திப்பில் தனது சட்டை மட்டும் பேண்ட்டுகளை கிழித்துக் கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தின் அருகே படுத்து கொண்டு இரண்டு தாமரை பூக்களை வைத்து அண்ணே! தாமரை மலர்ந்துருச்சுன்னே! என்று சொல்லி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்: 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணியை துவக்கி உள்ளது.  இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து,  ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து  தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பரந்தூர் பசுமை வெளி விமானம் நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த வெளியிட்டு உள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யக்கோரியும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  காலவரையற்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து வந்தனர்.

ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே வந்த நிலையில்,  ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் 117 மாணவ மாணவிகள் யாரும் வராததால் பள்ளி வளாகமும், வகுப்பறைகளும், வெறிச்சோடி காணப்பட்டது.  மேலும், பள்ளி மாணவ மாணவிகளுக்காக வழங்க காலை உணவு திட்டத்தின் கீழ் செய்து வைக்கப்பட்ட உணவுகளும் வீணாகிப் போனது குறிப்பிடத்தக்கது.

ரூ.2,000 நோட்டுகளுக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்:

நாடுமுழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கட்ந்த ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது, 2000 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கு பாடை கட்டியும்,  மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மாட்டுவண்டியில் ஆட்டோவை ஏற்றி போராட்டம்:
பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பெட்ரோல் விலை 93 ரூபாயாகவும்,  சமையல் எரிவாயு விலை 750 ரூபாயாகவும் உயர்ந்து வரும் நிலையில்,  மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நூதன முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 22.02.2021 அன்று  திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக மாட்டுவண்டியில் ஆட்டோவை ஏற்றி சென்று நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கூடாரம் அமைத்து போராட்டம்:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் இளங்கோவன்,  தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.வி. நகரில் கழிவுநீர் வடிகால் கட்டி தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  ஆனால் அதற்கான நடவ டிக்கைகள் எதுவும் தொடங்காததால் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.

மேலும் பேரூராட்சி நிர்வா கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் நூதன முறையில் தனி ஒருவராக திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.  பேரூராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் பாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகமே, ஆர்.வி.நகர் சாக்கடை நீரை வெளியேற்ற 20 அடி நீள வாய்க்கால் கட்ட ஆறு மாதங்களா, ஏற்கனவே டெங்கு மரணம் உறுத்த வில்லையா, திறமையற்ற நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் சாக்கடை கட்டு என கோஷங்கள் எழுப்பினார்.

மேலும் கோரிக்கை வாசகம் எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டு அதன் அருகில் துணியால் கூடாரம் அமைத்து தனது போராட்டத்தை தொடங்கினார்.  தகவலறிந்த செயல் அலுவலர் ஜெயலட்சுமி,  கவுன்சிலர் இளங்கோவனுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் காலக்கெடுப்படி வடிகால் அமைப்பதாக உறுதியளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட் டது.  இந்த நூதன போராட் டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மண் சாலையில் நாற்று நட்டு போராட்டம்:

திருவாரூர் அருகே குடவாசல் காப்பணாமங்கலம் நகர் பகுதியில் மழை நாட்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகி விடுவதால் நடந்து செல்ல முடியாததோடு, வாகனங்களிலும் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.  அவசர உதவிக்கு இந்த பகுதி வழியாக 108 ஆம்புலன்ஸ் கூட இயக்க முடியாத சூழலும் உள்ளது.  வாடகை வாகனங்களும் சாலை முகப்போடு திரும்பி விடுகின்றனர்.

குடியிருப்பை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் பாம்பு,  தேள்,  பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் வீட்டிற்குள் வந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.  இதனால் வீட்டிலிருந்தும் நிம்மதியில்லாமல்,  வெளியே செல்லவும் வழியின்றி தவிக்க வேண்டியுள்ளது. கொசுக்களும் அதிகமாகி தொல்லை கொடுப்பதோடு,  காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களும் பரவத் தொடங்கியிருக்கிறது.  அதிகாரிகள்,  அரசியல்வாதிகள் என பலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால்  அந்த பகுதி குடியிருப்பு நல சங்கத்தினர் ஒன்று சேர்ந்து சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

காய்கறிகளுக்கு இறுதி சடங்கு செய்து போராட்டம்:

நாடு முழுவதும் அத்யாவசிய உணவுப் பொருட்களான பருப்பு சீரகம் எண்ணெய் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தக்காளி கிலோ 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் தக்காளி பயன்படுத்துவதை பலரும் குறைத்தனர்.  விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. எனினும், கடைகளில் தக்காளி விலை குறைந்தபாடில்லை.
இதையடுத்து,  விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தக்காளி, பருப்பு, சின்ன வெங்காயம் ஆகிய உணவுப் பொருட்களுக்கு பால் ஊற்றி இறுதி சடங்கு செய்து நூதன முறையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Tags :
Advertisement