மோசடி வழக்கில் ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன்?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.!
நியூ ரைஸ் ஆலயம் மோசடி வழக்கில் ஒரு வருடம் ஆகியும், சொத்துக்களை முடக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில் சிறுசேமிப்பு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயங்கி வந்தன.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி எம். தண்டபானி, நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணையில் திருப்தி இல்லை எனவும் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும், எந்தெந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.