பெற்றோரின் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சென்னை ஐஐடியின் புதிய அறிவிப்பு விவகாரம்! தடையை நீக்க தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
சென்னை ஐஐடி வளாகத்தில், பெற்றோர்களின் வாகன போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு ஐஐடி இயக்குநரிடம் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் வனவாணி அறக்கட்டளை பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
ஐஐடி வளாகத்தில் இந்த பள்ளிகள் இயங்கி வருவதால் நுழைவாயிலில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் பயணித்துதான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அதனால் மாணவர்களை அவர்களது பெற்றோர், வாகனத்தில் அழைத்து கொண்டு உள்ளே விடுவார்கள். அப்படி வாகனத்தில் செல்லும்போது வளாகத்தில் சுற்றி திரியும் மான்கள் விபத்தில் அடிப்பட்டு காயமடையும் நிலை உள்ளதாம். அதனால் பள்ளி நிர்வாகம் திடீரென இந்த மாத தொடக்கத்தில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
அதில், ‘1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களை மட்டுமே வாகனங்களில் பள்ளிக்குள் அழைத்து வரவும், அழைத்து செல்லவும் பெற்றோர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதுவும் 20 கிமீ வேகத்தில்தான் வாகனங்களை இயக்க வேண்டும். அதற்கு மேல் வேகமாக சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களை அழைத்து கொண்டு விடவோ, அழைத்து வரவோ அனுமதி மறுக்கப்படுகிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளி நுழைவாயிலில் விட்டு செல்ல வேண்டும். அங்கிருந்து ஐஐடி நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் தற்போதுவரை இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடியை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்தார். அவரிடம் பெற்றோர்களின் வாகன போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.