புதிய அமைச்சர்கள் பதவியேற்பு......!
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த சாய் சரவணன்குமார் கடந்த 27ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அன்றைய தினமே புதுச்சேரி சட்டப்பேரவையில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனை தொடர்ந்து புதிய அமைச்சராக ஜான்குமாரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்த நிலையில் பாஜகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான், காரைக்காலை சேர்ந்த பாஜக மாநில துணைத் தலைவர் G.N.S.ராஜசேகரன், பாஜக மூத்த உறுப்பினர் செல்வம் ஆகியோரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் புதுச்சேரியின் புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார், துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் சபாநாயகர் செல்வம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களான தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.