பழனி கோயில் ரோப்கார் அருகே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திற்கு செல்ல புதிய இணைப்புச் சாலை - பக்தர்கள் மகிழ்ச்சி!
பழனி தண்டாயுதபாணி கோயில் ரோப்கார் அருகே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திற்கு செல்ல புதிய இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் செல்லும் கோயில்களில் முதன்மையானது பழனி அருள்மிகு
தண்டாயுதபாணி சுவாமிக் கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை
நிறுத்துவதற்காக கிழக்கு மற்றும் மேற்கு கிரிவீதிகளில் பிரத்யேக சுற்றுலா பேருந்து
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பெருவாரியான சுற்றுலா வாகனங்கள்
நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துள்ளது. மேற்கு
கிரிவீதியில் வின்ச் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பேருந்து
நிலையத்திற்கு பாலசமுத்திரம் சாலை வழியாக செல்லும் வகையில் வழித்தடம்
ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதனால், சுற்றுலா வாகனங்கள் எளிதில் வந்து செல்ல முடிகிறது. ஆனால், கிழக்கு
கிரிவீதியில் ரோப்கார் நிலையம் அருகே உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திற்கு
செல்லும் வாகனங்கள், சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் மலை அருகே
உள்ள சாலை வழியாகவும், ஆவின் பால்பண்ணை வழியாகவும், கிரிவீதிக்குள் புகுந்து
பேருந்துநிலையம் வர வேண்டி உள்ளது. இதனால், திருவிழா நேரங்களில் இப்பகுதியில்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கிரிவீதி சாலையில் வாகனங்கள்
செல்லும்போது பக்தர்கள் அவதிக்குள்ளாகும் சூழல் உண்டாகிறது.
வாகனங்கள் செல்ல இணைப்புச் சாலை அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை
விடுத்து வந்தனர். இதன் எதிரொலியாக தற்போது இடும்பன் மலை அமைந்துள்ள பைபாஸ் சாலையில் இருந்து, இடும்பன் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து கிழக்கு
கிரிவீதியில் உள்ள சுற்றுலா பேருந்து நிலையத்திற்கு புதியதாக இணைப்புச் சாலை
ஏற்படுத்தப்பட்டுள்ளது.