மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஸ்ரீஹரிகோட்டா புதிய ஏவுதளம் - எதிர்கால திட்டம் என்ன?
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே FLP மற்றும் SLP என்ற இரண்டு ஏவுதளம் அமைந்துள்ளது. முதல் ஏவுதளம் அமைத்து 30 ஆண்டுகளும் இரண்டாவது ஏவுதளம் அமைத்து 20 ஆண்டுகளும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சதீஷ் தவான் விண்வெளிய் ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது புதிய ஏவுதளத்திற்கு TLP என்று பெயர் வைக்கபட்டுள்ளது. இந்த ஏவுதளத்தை அமைக்க ரூ.3984.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. TLP ஏவுதளம் முழுமையாக கட்டி முடிக்கப்பட 4 ஆண்டுகள் ஆகும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. TLP ஏவுதளமானது SLP தளத்தின் செயல்பாடுகளைப் பங்கிடுவதுடன், அடுத்த தலைமுறை ராக்கெட்களையும் விண்ணில் ஏவும் வசதியுடன் கட்டமைக்கப்படவுள்ளது.
இந்த புதிய TLP ஏவுதளம் இஸ்ரோவின் திறனை அதிகரிக்கும் என்றும், நான்கு ஆண்டுகளுக்குள் ஏவுதளம் கட்டி முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏவுதளத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவும், மற்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.