மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்!
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார். இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது டப்ளின் நகரில் அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார்.
இதையடுத்து வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (மார்ச்.8 ) திறந்து வைத்தார். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பிரிட்டன் சென்ற போது மான்செஸ்டரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தைத் திறந்து வைத்தார். அப்போது, பிரிட்டனுக்கான இந்தியாவின் புதிய தூதரக ஜெனரலாக விசாகா யதுவன்ஷி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில்,
"மான்செஸ்டரில் உள்ள துணை தூதரகத்தில் துணைத் தூதராக விசாகா யதுவம்சி சர்வதசே மகளிர் தினத்தில் பொறுப்பேற்றிருப்பது மகளிர் மேம்பாட்டுக்கு பிரதமர் மோடி அரசு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டு.
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமானால் அது வர்த்தகம் அல்லது முதலீடுகளை ஈர்க்க கூடியது மட்டுமல்ல, இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் மிகவும் முக்கிய பங்காற்றும்" என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்.