புதிய குற்றவியல் சட்டங்கள் - முக்கிய அம்சங்கள் என்ன?
இன்று நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக காணலாம்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதையொட்டி, 5.65 லட்சம் காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும் இந்த 3 சட்டங்களும் அமலுக்கு வரும் இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 17,500 காவல் நிலையங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.
பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை :
பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), காவல் துறையிடம் இணையவழியில் புகார்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொலி வழியில் பதிவு செய்தல் போன்றவை புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றுள்ளது. அதன்படி பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை மூலம், ஒரு குற்ற நிகழ்வு எங்கு நடைபெற்றதோ, அந்த இடத்தின் காவல் நிலையம் மட்டுமில்லாமல், எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
45நாட்களுக்குள் தீர்ப்பு:
அதேபோல புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்.
புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் முதல் தகவல் அறிக்கையின்(எஃப்.ஐ.ஆர்.) இலவச நகலைப் பெற முடியும். இது சட்ட நடவடிக்கையில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும். அதேபோல ஏதேனும் வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டால், அவர் தனது நிலைமை பற்றி தனக்கு நெருங்கியவர்களுக்கு தகவல் தெரிவிக்க உரிமை உண்டு. இது அவருக்கான உடனடி ஆதரவையும் உதவியையும் உறுதி செய்யும்.
கைது விவரங்கள் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களுக்கு எளிதில் கிடைக்கும். அதேபோல, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் 14 நாட்களுக்குள் எப்ஐஆர், காவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உண்டு. இதன்மூலம், கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முக்கியமான தகவல்களை எளிதாகப் பெறுவர்.
கொடூரமான குற்றங்கள் தொடர்பான வழக்கையும் அதன் விசாரணையையும் வலுப்படுத்த, தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சியங்கள் சிதைக்கப்படுவதைத் தடுக்க, குற்றம் நடந்த இடங்களில் சாட்சியங்களைச் சேகரிக்கும் நடைமுறை முழுவதும் கட்டாயமாக வீடியோ பதிவாக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் புதிய நடைமுறை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவான இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படுவதை உறுதிசெய்ய புதிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த 90 நாள்களுக்குள் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்த தொடர்ச்சியான அறிவிப்புகளைப் பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சைக்கு புதிய சட்டங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. சவாலான காலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வு மற்றும் மீட்புக்கு முன்னுரிமை அளித்து, அத்தியாவசிய மருத்துவ சேவை உடனடியாக கிடைப்பதை இது உறுதி செய்யும்.
பாலியல் வன்கொடுமை - பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் பாதுகாப்பு
பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறை முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட்டால் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர் இல்லாத சூழலில் நேர்மையை உறுதிசெய்ய ஒரு பெண்ணின் முன்னிலையில் ஆண் மாஜிஸ்திரேட் அந்த நடைமுறையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் ஆடியோ-வீடியோ முறையில் காவல்துறை மூலம் பதிவு செய்யப்படும்.
நீதிமன்ற அழைப்பாணைகள் இனிமேல் மின்னணு முறையில் வழங்கப்படலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும் சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகபட்சம் 2 ஒத்திவைப்புகளை மட்டுமே நீதிமன்றங்கள் அனுமதிக்கும்.
சாட்சிகளின் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்வதற்கும் சட்ட நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சாட்சி பாதுகாப்பு திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த புதிய சட்டங்கள் கட்டாயப்படுத்துகின்றன.
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், ஆவணங்களை குறைத்தல் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையே முழுமையான தகவல்தொடர்புகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மேற்கண்ட நடைமுறைகள் வழிவகுக்கும்.