இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய குற்றவியல் சட்டங்கள்!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இதையொட்டி, 5.65 லட்சம் காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும் இந்த 3 சட்டங்களும் அமலுக்கு வரும் இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 17,500 காவல் நிலையங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), காவல் துறையிடம் இணையவழியில் புகார்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொலி வழியில் பதிவு செய்தல் போன்றவை புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை மூலம், ஒரு குற்ற நிகழ்வு எங்கு நடைபெற்றதோ, அந்த இடத்தின் காவல் நிலையம் மட்டுமில்லாமல், எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
அதேபோல புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் சில மோசமான திருத்தங்கள் இருப்பதாகவும் இதனால் நாட்டில் அமைதியின்மை நிலவ வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உள்ளிட்டவைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.