Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய சர்ச்சை | வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

10:44 AM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக கூறப்படும் நிலையில்,  மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்தியாவில் உள்ள பல சொத்துகளுக்கு உரிமைகோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 40 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த வாரத்தில் நாடாளுமன்ற அமர்வில் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

நாட்டில் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்களும், பெரிய முஸ்லீம் செல்வந்தர்களும் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை பள்ளிவாசல்களுக்கு தானமாக வழங்கினர். இந்த சொத்துகள் வக்ஃப் சொத்துகள் என்று கூறப்படும் நிலையில், இதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு முஸ்லீம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்படுகின்றன. பள்ளிவாசல் மற்றும் தர்ஹா பராமரிப்பு, கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கும் செலவிடப்படுகிறது.

இத்தகைய சொத்துகளை பராமரிக்க கடந்த 1954ஆம் ஆண்டு வக்ஃப் வாரிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன்கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வக்ஃப் வாரியங்களை கண்காணிப்பதற்காக, வக்ஃப் சட்டத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் கடந்த 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கீழ் இது இயங்குகிறது. 1954ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995ஆம் ஆண்டு புதிய வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்த போது, இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, வக்ஃப் வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது, மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது உள்ளிட்ட புதிய அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.தற்போது நாடு முழுவதும் 30 வக்ஃப் வாரியங்களின் கீழ் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சொத்துகள் இருக்கின்றன.

இந்த சட்டத்திருத்த மசோதா மிக விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில்,  மத்திய பாஜக அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மதரீதியில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால், வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் குறித்து, மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Tags :
AmendmentCentral governmentWaqf Board Act
Advertisement
Next Article