மகளிர் காவலர்களுக்கு மகப்பேறு விடுமுறையுடன் புதிய சலுகை - #CMOTamilnadu மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மகளிர் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக பெண்ணின் பெற்றோர்கள் அல்லது கணவரை சார்ந்த மாவட்டங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றிய காவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதுகளாக இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பான பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தேர்வு செய்யப்பட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கலாநிதி வீராசாமி எம்.பி மற்றும் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஐஜி, டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சர் என்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன். காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்பது கூடுதல் மகிழ்ச்சி. அனைத்து துறைகளும் என்னுடைய துறைகள் தான். ஆனால், காவல்துறையினர் என்னை அதிக உரிமை கொண்டாட முடியும். காவல்துறையினர் பதக்கம் வாங்கியிருப்பது நான் பதக்கம் வாங்கியது போல் உள்ளது. பதக்கங்கள் பெற்ற காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்.
இந்த பதக்கங்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய உழைப்பிற்கு தலை வணங்க வேண்டும். தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறப்பான சட்டத்தால் தான் கல்வி, தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினருக்கு 55 ஆண்டுகளாக பதக்கங்கள் கொடுக்கப்பட்ட வருகிறது. இந்த பதக்கங்கள் கொடுப்பதால் காவல்துறையுடன் மகிழ்ச்சி அடைகின்றனர். பதக்கங்கள் வழங்கும் விழா மற்றவர்களும் பதங்கள் பெற வேண்டும் என்பதற்காகத் தான்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த காவல்துறை மிகச் சிறப்பான முறையில் இருந்தாலும் கூட, தற்போது காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூன்றாவது காவல் ஆணையத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் அமைத்தார். மக்களை பாதுகாக்கும் காவலரை பாதுகாப்பது அரசின் கடமை. காவலரின் குறைகளை நிறைவேற்றி வருகிறோம். காவலரின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறோம். காவல்துறையில் மகளிர் இடம்பெற செய்தது கருணாநிதி தான். எனக்கு கமெண்ட்ராக ஒரு பெண் அதிகாரி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுமுறை ஒரு ஆண்டு அளிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு குழந்தைகளை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக பெண்ணின் பெற்றோர்கள் அல்லது கணவரை சார்ந்த மாவட்டங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம். தொடர்ந்து பெண் காவலர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.