For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதலமைச்சர் - யார் இந்த சம்பாய் சோரன்..?

09:36 AM Feb 02, 2024 IST | Jeni
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதலமைச்சர்   யார் இந்த சம்பாய் சோரன்
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள சம்பாய் சோரனின் பின்னணி மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்...

Advertisement

ஆட்சி மாற்றங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்க்கண்டின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளார். யார் இந்த சம்பாய் சோரன்? அவரின் பின்னணிதான் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே நில சுரங்க முறைகேடு வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, அவ்வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்து அதிரடி காட்டியது.

ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்தபோதே, கட்சிக்குள் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும், பலதரப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டது. அப்போது ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயர் அக்கட்சி நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருந்த ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்பாய் சோரன் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு திருமணமாகி 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரனுடன் இணைந்து, ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தார். ஜார்க்கண்ட் இயக்கத்தின் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்ட சம்பாய் சோரனுக்கு 'ஜார்க்கண்ட் புலி' என்ற பெயரும் உண்டு.

ஒரு கட்டத்தில் மக்கள் அளித்த பேராதரவுடன் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த சம்பாய் சோரன், சரைகேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். பெரிய வாக்கு வித்தியாசத்தில் அந்த தேர்தலில் வெற்றிகண்ட சம்பாய் சோரன், முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அதன்பிறகு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட சம்பாய் சோரன், அக்கட்சியில் தனது தகுதியை படிப்படியாக வளர்த்துக்கொண்டு மூத்த தலைவராக உருவெடுத்தார்.

இதையும் படியுங்கள் : “பீகாரில் 5 மணி நேரத்தில் ஆட்சி அமைந்தது... ஜார்க்கண்டில் 22 மணி நேரமாகியும் தகவல் இல்லை...” - மஹுவா மாஜி குற்றச்சாட்டு

ஹேமந்த் சோரன் தலைமையில் 2019-ம் ஆண்டு உருவான அமைச்சரவையில் சம்பாய் சோரனுக்கு உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் போக்குவரத்து துறைகளின் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்புகளையும் திறம்பட கையாண்டு, மக்கள் நலன் சார்ந்த பணிகளை தேடிச் சென்று செய்த சம்பாய் சோரனுக்கு, தற்போது தேடி வந்திருக்கிறது முதலமைச்சர் நாற்காலி. ஜே.எம்.எம் கட்சித் தலைவர் தற்போது அமலாக்கத்துறை வலையத்துக்குள் இருக்கும் நிலையில், கட்சியையும் ஆட்சியை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பை தனது தோள்களில் ஏற்று இருக்கும் சம்பாய் சோரனின் அடுத்தடுத்த நகர்வுகளை உற்று நோக்கி வருகிறது ஜார்க்கண்ட் அரசியல் களம்.

Tags :
Advertisement