சீனாவின் துன்புறுத்தலால் வெளியேறும் உய்குர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக புதிய மசோதா அமெரிக்காவில் அறிமுகம்!
சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் 12 மில்லியன் உய்குர் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மையின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சீன அரசு முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்வதாக கூறி கடந்த 2022ல் 48 பக்கத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
அதில், உய்குர் இஸ்லாமியர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுவது, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சீன அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும் இளைஞர்கள் பரிசோதனைக்கு எலிகளைப் போன்று பயன்படுத்தப்படுவதாகவும் அவர்களை வைத்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதாவும் அதில் கூறப்பட்டது.
உய்குர் இஸ்லாமியர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள மசூதிக்கள் அழிக்கப்படுகிறது என்ற பல அதிர்ச்சிகரமான துன்புறுத்தலை பற்றி அந்த அறிக்கை விவரித்திருந்தது. இதற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால், சீன அரசிடம் இருந்து தப்பிக்க உய்குர் இஸ்லாமியர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி பல நாடுகளுக்கு அகதிகளாக செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் உய்குர் மற்றும் பிற இன சிறுபான்மையினர் அமெரிக்காவில் தஞ்சம் கோருவதை எளிதாக்குவதை 12 பிரதிநிதிகள் கொண்ட குழு அமெரிக்க நாடாளுமன்றத்தில் உய்குர் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்திற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியது. இது சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் வாழும் 12 மில்லியன் உய்குர்களுக்கு ஆதரவாக உள்ளது.