10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்... பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கல்வி துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,
“வரும் நிதியாண்டில் புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 - 5ம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டில் 2,000 பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வரும் பள்ளிகளில் உள்ள 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் வண்ணம், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். அரசுப் பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்திற்காக ரூ.200 கோடி கொண்ட சிறப்புத் தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும்.
அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் திறன்மிகு உற்பத்தி (Smart Manufacturing Technology), இணையப் பாதுகாப்பு (Cyber Security and Networking), உணவு தொழில்நுட்பம் (Food Technology), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம் (Renewable Energy Technology), ஆளில்லா வான்கலம் வடிவமைப்பு (Drone Design and Application) ஆகிய துறைகளில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் & 2ம் சுழற்சி முறையில் மாணவர்கள் அதிகம் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15,000 இடங்கள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி (அ) மடிக்கணினி வழங்கப்படும். அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நிதி ரூ.700 கோடியாக உயத்தப்படும். சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்' அமைக்கப்படும். போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடம் வசதிகளுடன் கட்டப்படும்"
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரச தெரிவித்தார்.