#UniformCivilCode ஐ ஒருபோதும் ஏற்கமாட்டோம் - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டவட்டம்!
பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இன மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் கடந்த பின், 2016 ஆம் ஆண்டு 21-வது சட்ட ஆணையம் நிறுவப்பட்டது. பாஜக அரசால் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், பொது சிவில் சட்டத்தின் சாதக பாதகங்களை 2 வருடங்கள் ஆய்வு செய்து 152 பக்க அறிக்கையை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் பொது சிவில் சட்டம் அவசியமில்லை, தற்போதைய சூழலுக்கு உகந்ததாகவும் இருக்காது என கூறப்பட்டது. அதோடு இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், பார்சியர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் தனிப்பட்ட பாதிப்புகள் அதிகமாக உள்ளது. அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பாஜக அரசால் அமைக்கப்பட்ட 21-வது சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாமல், பொது சிவில் சட்டத்தால் மட்டுமே இஸ்லாமிய பெண்களை காக்க முடியும் என மத்திய அரசு சொல்லி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணா்கள், பாா்சி இனத்தவர் உள்ளிட்டோர் சிறுபான்மையினராகவும் உள்ளனர். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினருக்கென்று தனித்தனியே உள்ளன. அதற்குப் பதிலாக, அனைவரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றச் செய்வதே, பொது சிவில் சட்டத்தின் நோக்கமாக கூறப்படுகிறது.
பொது சிவில் சட்டத்திற்கு நாடு முழுவதும் சிறுபான்மை சமூகங்களுக்கிடையே எதிர்ப்பு உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் பொது சிவில் சட்டம் நம் நாட்டிற்கு அவசியமான ஒன்று என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
“ பொது சிவில் சட்டம் முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்திற்கு எதிராக உள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் மதத்தின்படி சட்டங்களை நடைமுறைப்படுத்த உரிமை உண்டு. இது ஷரியத் சட்டம் 1937 ஐ இந்திய அரசியலமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 25 வது பிரிவில், குடிமக்கள் மதத்தை பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும், அதன் சட்டங்களுக்கு கட்டுப்படுவதற்கும் அடிப்படை உரிமை உண்டு.
முஸ்லிம்களைத் தவிர மற்ற சமூகங்களின் குடும்பச் சட்டங்களும் அவர்களின் சொந்த மத மற்றும் பழமையான மரபுகளுக்கும் அரசியலமைப்புச் சட்டம் அடிப்படைஉரிமையை வழங்கியுள்ளது.” என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.