நெட் தேர்வு | பாடத் திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு!
தேசிய அளவிலான தகுதித் தேர்வின் நெட் பாடத் திட்டத்தைப் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உதவித் தொகையுடன் இளநிலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவதற்கு தகுதி பெறவும், உதவிப் பேராசியர் பணிக்கு தகுதி பெறவும் 'நெட்' தேர்வில் தகுதி பெறுவதை யுஜிசி கட்டாயமாக்கியுள்ளது.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்கள் என ஆண்டுக்கு 2 முறை நடத்தி வருகிறது. மொத்தம் 83 பாடங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான பாடத் திட்டத்தை தற்போது புதுப்பிக்க யுஜிசி முடிவு செய்துள்ளது. அதற்கென நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்:விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்!
இதுகுறித்து ஜகதீஷ் குமார் கூறியதாவது:
நெட் தேர்வு பாடத்திட்டத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி கடந்த 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பன்முக துறைகள் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உயர் கல்வியில் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த புதிய மாற்றங்களுக்கு ஏற்ற வகையில், நெட் தேர்வு பாடத்திட்டத்தை புதுப்பிப்பது என்று அண்மையில் நடைபெற்ற யுஜிசி குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கென நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்படும்.
இந்த புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும். எனவே, தேர்வர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றார்.