ஒடிசா பல்கலைக்கழகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நேபாள மாணவி - 3 மாதத்தில் 2வது சம்பவம்!
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT)-ல் படித்து வந்த நேபாள மாணவி ஒருவர் நேற்று மாலை விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேபாளத்தின் பீர்குஞ்ச் பகுதியை சேர்ந்த மாணவி, கணினி அறிவியல் படிப்பை படித்து வந்துள்ள நிலையில் அவரது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மாணவியின் மரணம் குறித்து ஒடிசா காவல்துறையினர் நேபாள தூதரகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் எய்ம்ஸ் புவனேஸ்வரில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஒடிசா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு KIIT இல் பயின்று வந்த மற்றொரு நேபாள மாணவி பிரகிருதி லாம்சலின் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கே.ஐ.ஐ.டி.கல்வி மையத்தின் 21 வயது மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேர் மீதும் வழக்கு பதிவானது. இந்நிலையில், மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.