நேபாளம் தன்பாலினத் திருமணம் முதல் முறையாகப் பதிவு!
தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக, தன் பாலினத் திருமணங்களை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் புதன்கிழமை (நவ.29) தொடங்கப்பட்டது.
நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007- ஆம் ஆண்டே அனுமதி அளித்தது. பின்னர் 2015-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டத்திலும் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மாயா குருங் என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டபூர்வமாக நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவையும், இதுபோன்ற பிற மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், தன் பாலினத் திருமணங்களுக்கு கடந்த ஜூன் மாதம் சட்ட அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, மாயா குருங், சுரேந்திர பாண்டேவின் திருமணம் புதன்கிழமை (நவ.29) பதிவு செய்யப்பட்டது.