நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு!
நேபாளத்தில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 30 நாட்களில் 3-வது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11.32 மணி அளவில் அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த சூழலில் வட இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. புதுடெல்லி, நொய்டா, பாட்னா ஆகிய பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 132 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு நேபாளத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 140-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாஜர்கோட் பகுதியில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஜாஜர்கோட்டில் மட்டும் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் படுத்திருந்த போது சீலிங் ஃபேன் ஆடியதாகவும், கட்டிலில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும், தொடர்ந்து அதிர்வுகளை உணர்ந்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதன் பிறகே தங்களை போன்று பலரும் வீட்டை விட்டு வெளியே வந்திருந்ததை அறிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.