தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர் நெல்சன்..
இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன். தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான திரைக்கதை அவர் எழுதி வருகிறார். இப்படியான நிலையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார் நெல்சன்.
முதல் படமான கோலமாவு கோகிலா படம் வெளியாவதற்கு முன்பு நெல்சன் சிலம்பரசன் நடித்த மன்னன் படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் இந்தப் படம் வெளியாகாமல் போனது. தற்போது தமிழின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ள நெல்சன் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் “20 வயதில் மீடியா மற்றும் என்டர்டெயின்மெண்ட் துறையில் என்னுடைய பயணம் தொடங்கியது. இத்தனை ஆண்டுகளில் பல்வேறு வெற்றி, தோல்விகள் இந்தத் துறையில் என்னுடைய வளர்சிக்கு பங்காற்றி இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவது என்னுடைய கனவாக இருந்திருக்கிறது. அந்த வகையில் ’ஃபிலமெண்ட் பிக்ச்சர்ஸ்’ (Filament Pictures) என்கிற என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதை உற்சாகமாக பகிர்ந்துகொள்கிறேன்.
பரவலான ரசிகர்களை சென்றடையும் கிரியேட்டிவான கதைகளை தயாரிப்பதே ஃபிலமெண்ட் பிக்ச்சர்ஸின் முதன்மையான நோக்கம். அந்த வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான ஒரு படத்தை எனது முதல் படமாக தயாரிக்க இருக்கிறேன். வரும் மே 3ஆம் தேதி இப்படத்தின் அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி “ என்று நெல்சன் தெரிவித்துள்ளார்.