மாணவர்களை கொடூரமாக தாக்கிய ‘ஜல்’ #NEET பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க, கேரளாவில் முகாமிட்ட நெல்லை தனிப்படை!
நெல்லையில் மாணவர்களை தாக்கிய ‘ஜல்’ நீட் அகாடமியின் உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்துள்ளது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவர், நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் 'ஜல்' என்ற நீட் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆண், பெண் என இருபாலருக்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அகாடமியில் படிக்கும் மாணவர்களை பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன், பிரம்பாலும், காலணியாலும் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு நடத்தி, தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜலாலுதீன் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில், சிறார் பாதுகாப்பு சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய, ஜல் நீட் பயிற்சி மைய உரிமையாளரை தேடி, நெல்லை தனிப்படை கேரளா விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜலாலுதீன் அகமதை பிடிக்க காவல் ஆய்வாளர்கள் மாரியப்பன்,விஜி தலைமையிலான இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தற்போதைய நீட் அகாடமி ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், மாணவர்கள் போன்ற பலருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.