நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இந்த கோயிலில் காந்திமதி (56) என்ற யானை இருந்தது. இந்த யானைக்கு வயது முதிர்வு காரணமாக மூட்டு வலி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்துவந்தன. இதற்காகச் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த மூட்டு வலி பிரச்னை, கடந்த ஒரு மாதமாக தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் கால்நடை மருத்துவர்கள் காந்திமதிக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படுக்காமல் நின்றவாறே தூங்கி, காந்திமதி தினசரி பணிகளை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே நேற்று (ஜன. 11) அதிகாலை படுத்துத் தூங்கிய காந்திமதியால் பின்பு மீண்டும் எழுந்து நிற்க முடியவில்லை. இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட சூழலில், அவர்கள் உடனடியாக கோயிலுக்கு வந்து காந்திமதிக்கு மருந்துகள் கொடுத்தனர். கிரேன் உதவியுடன் மேலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உயிரிழந்தது. இந்த காந்திமதி யானை கடந்த 1985ஆம் ஆண்டு கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. நயினார் பிள்ளை என்பவர் இந்த யானையை நன்கொடையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.