#NellaiapparTemple | நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு!
நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருநெல்வேலியில் பிரபலமான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், ஆவணி மூலத் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு மானூா் அம்பலவாணா் கோயிலில் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, நேற்று இரவு சந்திரசேகரர் பவானி அம்பாள், பாண்டியராஜா சண்டிகேஸ்வரர், தாமிரபரணி அம்பாள், அகஸ்தியர், குங்கிலிய நாயனார் ஆகியோா் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூர் அம்பலத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து, மானூர் அம்பல தெருவில் சுவாமி நெல்லையப்பர் கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடா்ந்து கோவில் அம்பலத்தில் அடிக்கு ஆயிரம் பொன் கொடுப்பதாக கூறி கருவூர் சித்தரை திருநெல்வேலிக்கு அழைக்கும் திருவிளையாடல் ஓதுவாமூர்த்திகளால் பாடப்பட்டது. நெல்லையப்பர் தரிசனம் பெற்ற கரூர் சித்தர் தன் சாபத்தை திரும்ப பெற்றுக் கொண்டதாக நம்பப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.