ரயில்வே கேட்டை மூடுவதில் அலட்சியம் - ரயில் வரும்போது ஊழியரின் அதிர்ச்சி செயல்!
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில், ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடத் தவறிய, வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் ஜெய்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்துத் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம், வாலாந்தரவையில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. அப்போது, மதுரை-ராமேஸ்வரம் ரயில் அந்தப் பாதையில் வந்துள்ளது. ரயிலைக் கண்ட பொதுமக்கள் அபாயத்தை உணர்ந்து, கூச்சலிட்டு, ரயில்வே கேட்டை மூடுமாறு சைகை செய்தனர். அவர்களின் கூக்குரல் கேட்டு, கேட் கீப்பர் ஜெய்சிங் அவசரமாக வந்து ரயில்வே கேட்டை மூடினார். ரயில் சில விநாடிகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கடந்து சென்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் பரவலாகப் பகிரப்பட்டு, கேட் கீப்பரின் கவனக்குறைவுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதன் விளைவாக, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கேட் கீப்பர் ஜெய்சிங்கை பணியிடை நீக்கம் செய்தது. அவரது கவனக்குறைவு குறித்துத் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விசாரணையின் முடிவில் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.