For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தோ்வு மையம், நகரவாரியாக நீட் தோ்வு முடிவுகள்! உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டது!

01:14 PM Jul 20, 2024 IST | Web Editor
தோ்வு மையம்  நகரவாரியாக நீட் தோ்வு முடிவுகள்  உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டது
Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகரவாரியாக தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. 

Advertisement

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தோ்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்வை 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்த நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு சா்ச்சையில் இத் தோ்வு சிக்கியது. தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பிகாா், உத்தர பிரதேசத்தில் உள்ள தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்து பெரும் சா்ச்சையானது.

நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டதும், சில தோ்வா்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் எந்தவொரு தெளிவான நடைமுறைகளையும் பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் மிகப்பெரிய சா்ச்சையானது. இந்த முறைகேடு புகாா்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யவேண்டும், மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீட் முறைகேடு வழக்கின் தீா்ப்பை லட்சக்கணக்கான மாணவா்கள் எதிா்நோக்கி காத்துள்ளனா். சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை தொடா்பான சில விவரங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை வெளியிட்டால், விசாரணையை பாதிக்கும். முறைகேடுகள் காரணமாக நீட் தோ்வின் புனிதத்தன்மை முழுமையான அளவில் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படும் போது மறுதோ்வு நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும். எனவே, நீட் தோ்வை ரத்து செய்யக் கோரும் அல்லது மறு தோ்வு நடத்தக் கோரும் மனுதாரா்கள், வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த நீட் தோ்வையும் பாதித்தது என்பதற்கான ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு முடிவுகளை வெளியிடும்போது, தோ்வா்களின் அடையாளங்களை மறைத்து வெளியிட வேண்டும். வினாத்தாள் கசிவுக்கும் தோ்வுகள் தொடங்கியதற்கும் உள்ள இடைவெளியை தெளிவாக கணக்கிட விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூலை 22) நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகரவாரியாக வெளியிட்டுள்ளது தேசிய தோ்வுகள் முகமை. நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கெடு விதித்திருந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்களா என்பதை ஆராயும் வகையில் நகர மற்றும் தேர்வு மையவாரியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்களில் அதிகம் பேர், அதிக மதிப்பெண் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பான முறையில் விசாரணையை கொண்டு செல்ல உச்ச நீதிமன்றம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement