நீட் மறுதேர்வு முடிவுகள் - ஒரு மாணவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை!
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முன்பு முழு மதிப்பெண் எடுத்திருந்த மாணவர்களில் ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்தியதால் கடத்தப்பட்ட சிறுவன் – பரியேறும் பெருமாள் பட பாணியில் கொடூரம்!
என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று என்டிஏ விளக்கம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், நாடு முழுவதும் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி நாடு முழுவதும் 1,563 பேருக்கு மறுதேர்வு ஜூன்23 அன்று 7 மையங்களில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்ற தேர்வு, மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்ததும் நீட் மறு தேர்வு எழுத மாணவர்கள் பலர் வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
சத்தீஸ்கர் மாநிலம் பாலோட்டில் 185 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில், 115 மாணவர்கள் தேர்வு எழுதினர். 70 பேர் தேர்வெழுத வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர் அதேபோல, பல மையங்களில் மாணவர்கள் பலர் தேர்வெழுத வரவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள பதிவில், 1,563 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வில் 813 பேர் மட்டுமே தேர்வெழுத வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 48 சதவீதம் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை. இந்த நிலையில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது.
முந்தைய முடிவுகளில் கருணை மதிப்பெண்களுடன் ஆறு மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர். அதில் ஐந்து மாணவர்கள் மட்டுமே மறுதேர்வு எழுதினர். மற்றொரு மாணவர் கருணை மதிப்பெண்ணுக்கு முந்தைய மதிப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். இந்த நிலையில் மறுதேர்வெழுதிய 5 மாணவர்களில் யாரும் முழு மதிப்பெண்ணை மீண்டும் பெறவில்லை. அதேசமயம், 5 மாணவர்களின் புதிய மதிப்பெண்கள் குறித்தும் தேசிய தேர்வு முகமை எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.