“நீட் விலக்கு மசோதா.. மெட்ரோ ரயில் திட்டம்.. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு..” - மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்!
நீட் விலக்கு மசோதா, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள், தேசிய பேரிடர் நிவாரணம் மற்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில்,
“இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நான் ஆற்றிய உரையில், நீட் தேர்வினை ரத்து செய்யவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதா-2021 க்கு ஒப்புதல் வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினேன். மேலும், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தி வருவதையும், அதில் 80 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டதையும் குறிப்பிட்டேன்.
நீட் ஊழல் வெடித்த பிறகு தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தப்பிக்க வழிவகுத்த, "பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா 2024" ஆனது, 9.2.2024 அன்று நிறைவேற்றப்பட்டு, 12.2.2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ஏன் 21.6.2024 அன்று மட்டுமே வெளியிடப்பட்டது என்று கேள்வி எழுப்பினேன். குடியிருப்பு உரிமையாளர்கள் வீட்டுச் சங்கங்களைப் போலவே, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள, நீட் உட்பட 14 க்கும் மேற்பட்ட முக்கியமான போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு பொறுப்பான தேசிய தேர்வு முகமைக்கு சட்டமன்ற ஆதரவின் தேவை குறித்தும் எடுத்துரைத்தேன். இந்த பொறுப்பு கூறல் இல்லாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதி வழங்கப்படுகிறது.
(A) ரூ.63,246 கோடி மதிப்பீட்டில், 119 கி.மீ தொலைவிற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து 50:50 பங்கின் அடிப்படையில் கூட்டு முயற்சியாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் 21.11.2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கு நிதியுதவி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த திட்டமானது, 17.8.2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பரிந்துரைக்கப்பட்டாலும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) ஒப்புதலுக்காக இன்னும் காத்திருக்கிறது. இந்த திட்டத்தின் பரிந்துரைக்குப் பிறகு, பொது முதலீட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைப் பெருநகர் பகுதியின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி தமிழக அரசு இரண்டாம் கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான செலவினம் மாநில நிதியிலிருந்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் திட்டச் செலவினங்களானது, பணிகள் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்தினாலும், இந்த செலவினத்தால் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வித தாமதமும் இன்றி, இந்த நிலை சரிசெய்யப்பட வேண்டும். எனவே, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, 50%, அதாவது ரூ.31,623 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறோம்.
(B) 2023 டிசம்பரில் தமிழகம் வரலாறு காணாத இரண்டு இயற்கை பேரிடர்களை சந்தித்ததாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறுகிறது. 'மிச்சாங்' புயலால் மிக அதிக மழை பெய்தது மற்றும் மாநிலத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் 2023 டிசம்பரில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் உள்கட்டமைப்புகளும், மக்களின் வாழ்வாதாரங்களும் சீர்குலைந்துள்ளன. மத்திய குழுவின் அதிகாரிகள் பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்த பிறகு, மாநில அரசு ரூ.37,907.21 கோடியை இழப்பீடாகக் கோரியது.
ஆனால், மத்திய அரசு 26.4.2024 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.276 கோடியை மட்டுமே இழப்பீடாக வழங்கியுள்ளது. இயற்கைப் பேரிடர்களின் அளவையும், உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தையும் கருத்தில் கொண்டால், இந்த இழப்பீட்டுத் தொகையானது முற்றிலும் போதுமானதல்ல மற்றும் இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். எனவே, எனவே, மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும், மாநில அரசுக்கு ஏற்கனவே ஏற்பட்ட செலவினத்தை ஈடுகட்டுவதற்கும் குறைந்தபட்சம் ரூ.3,000 கோடியை உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்க வேண்டும்.
(C) 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு உரிய தரவுகள் எதுவும் இல்லாததால், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தேவைப்படுகிறது.
(D) தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை:-
1. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4-வது இருப்புப் பாதை அமைத்தல்
2. திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய வழித்தடம்.
3. மதுரை - தூத்துக்குடி - வழி – அருப்புக்கோட்டை (143.5 Kms) (18 கி.மீ மட்டுமே ஆணை அளிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ளவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்).
4. மீஞ்சூர் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் - சிங்கப்பெருமாள்கோவில் – மதுராந்தகம்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.