நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது!
தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 4) வெளியானது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே பீகார் மாநிலத்தில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. மேலும், நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், ஹரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்த சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின.
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதால் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீட் கலந்தாய்வுக்கு தடைவிதிக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தலில் 4 வேட்பாளர்கள் ஒரே மாதிரியாக 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்களா? உண்மை என்ன?
இந்நிலையில், நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்தும், மறு தேர்வு நடத்தக்கோரியும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பாலாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய கலால் அலுவலகத்தை சென்றடைந்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய கலால் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.
இதனால் இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நீட் தேர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பினர். இது தொடர்பாக 21 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.