இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு!
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நிலையில், நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
இந்த நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் மாணவ, மாணவியர் நீட் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி உட்பட மொத்தம் 31 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வுகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், வெளிர்நிற அரை கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும். முழு கை சட்டைகளை அணியக் கூடாது. ஷீ, கை கடிகாரம், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை அணியக் கூடாது. மேலும், ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள், காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது. தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.
சாப்பிடக் கூடிய பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாண்வர்கள் முற்பகல் 11.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு பின்னர் வரும் மாணவர்கள், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை உள்ளே கொண்டு செல்லலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு இந்த தேர்வு நடைபெறும்.
ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.