For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நீரஜ் சோப்ராவுக்கு கடவுள் நிறைய வெற்றிகளை கொடுக்கட்டும்" - பாக். வீரர் நதீமின் தாயார்!

11:57 AM Aug 10, 2024 IST | Web Editor
 நீரஜ் சோப்ராவுக்கு கடவுள் நிறைய வெற்றிகளை கொடுக்கட்டும்    பாக்  வீரர் நதீமின் தாயார்
Advertisement

நீரஜ் சோப்ராவிற்கு நிறைய வெற்றிகளையும் மற்றும் பதக்கங்களையும் கொடுக்கட்டும் என பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் தாயார் தெரிவித்துள்ளார். 

Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதனையடுத்து இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றார். இந்த வெற்றியை நீரஜ் சோப்ராவின் குடும்பத்தினர் கொண்டாடினர்.

இந்த சூழலில் நீரஜ் சோப்ராவின் தாய் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமையும் புகழ்ந்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதே. தங்கம் வென்றவரும் என் பிள்ளை தான். அந்த வெற்றிக்கு பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. நீரஜ் காயமடைந்தார், காயத்துடன் அவர் பெற்றுத்தந்த இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தடகள வீரரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீரஜ் வரும்போது அவருக்குப் பிடித்த உணவை சமைத்து வைப்பேன்” என்றார்.

அந்த கருத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் “தங்கம் வென்றவரும் என்னுடைய மகன் தான்” என்ற வார்த்தைகளை ஒரே ஒரு அம்மாவால் மட்டுமே தெரிவிக்க முடியும். அற்புதமானது” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீரஜ் சோப்ராவும் என்னுடைய மகன் போன்றவர்.  அவருக்காகவும் நான் வேண்டிக் கொண்டேன். அவர் நதீமின் சகோதரரை போன்றவர். கடவுள் அவருக்கும் நிறைய வெற்றிகளையும் மற்றும் பதக்கங்களையும் கொடுக்கட்டும்" என்று கூறினார். அவருடைய இந்த கருத்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

Tags :
Advertisement