நீ எண்டு கார்டு வச்சா.. இவ டிரெண்ட மாத்தி வைப்பான்.. தோனி குறித்து ஹஸ்ஸி கூறியது என்ன?
மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல்2024 கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. ப்ளே ஆஃபில் இரண்டு அணிகள் இடம்பிடித்து விட்டன. இந்நிலையில் சென்னை அணியா அல்லது பெங்களூரு அணியா என போட்டி தற்போது மாறியுள்ளது. ஏனெனில் வரும் சனிக்கிழமையன்று சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெல்லுமா அல்லது பெங்களூரு வெல்லுமா? என பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது ரசிகர்களிடையே.
கோலி ஒரு முறை கூட கப் அடிக்கவில்லையே என்ற சோகம் ஒருபக்கம். இதுதான் தோனியின் கடைசி சீசன் என்பது மற்றொரு பக்கம். இவ்வாறு விவாதம் ஒருபக்கம் சென்று கொண்டிருந்தாலும், பெங்களூரு அணியின் ரசிகர்களே சென்னை அணி வெல்ல வேண்டும் என விரும்புகின்றனர். ஏனெனில் இது தோனியின் கடைசி சீசன் என்பதால். போட்டியில் சென்னை வெல்லுமா? வெல்லாதா என்பதைவிட தோனியின் கடைசி சீசன் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் தோனி இன்னும் விளையாட வேண்டும் என பெரும் ஆசையோடு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி ஒரு செய்தியை கூறியுள்ளார்.
“ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம். அவர் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். போட்டிக்கு நன்றாக தயார் ஆகிறார். சிஎஸ்கேவின் பயிற்சி முகாமில் முன்னதாகவே இணைந்து தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவருக்கு முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலிருந்தே அவர் காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், முடிவு எம்எஸ் தோனியிடமே உள்ளது. அவர்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.