நீலகிரி பந்தலூர் அருகே 3 வயது சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உள்பட இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கூடலூர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில்
சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும் மூன்று வயது சிறுமி என இரண்டு பேர்
உயிரிழந்த நிலையில் நான்கு பேர் இதுவரை காயமடைந்ததுள்ளனர்.
இதனால் பொது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை ஆட்கொல்லி சிறுத்தையாக
அறிவித்து சுட்டு பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று மாலை முதல்
கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்
இரவு முழுவதும் தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததோடு,
கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு
செய்யப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தேவாலா, நாடுகாணி,
சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
முற்றிலுமாக கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கூடலூர் பகுதியில்
இயங்கும் லாரி, ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் என அனைத்து தரப்பினரும்
வாகனங்களை இயக்காமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் கூடலூர் நகர பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள்
முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே வேறு எதும் அசம்பாவிதங்கள்
நடைபெறாமல் இருக்க நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்
காவல்துறையினர் நகரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.