செம்பருத்தி டீ குறித்த பதிவால் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!
செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல், சில தொழில்களில் முதலீட்டையும் செய்துள்ளார். மேலும், ஃபேமி9 என்கிற அழகுசாதனப் பொருள்களை விற்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த சூழலில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "செம்பருத்திப் பூ தேநீர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனை, என் உணவுத்திட்டத்தில் கொண்டு வந்தவர் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கெனரிவால். இந்தத் தேநீர் ஆயுர்வேதத்தில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படுகிறது. இது சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் மருத்துவர் கெனரிவாலை தொடர்பு கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கல்லீரல் மருத்துவர் சிரியாக் ஏபி பிலிப்ஸ், ”செம்பருத்தி தேநீர் இதையெல்லாம் குணப்படுத்தும் என எந்த ஆய்வும் நிருபிக்கவில்லை. உங்களை 87 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பதால் மருத்துவம் சார்ந்த குறிப்புகளைச் சொல்லும் போது கவனமாகவும் பொறுப்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். இது, உங்கள் ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம்போல் தெரிகிறது. இந்தத் தேநீர் குறித்து எந்த ஆதாரமும் இல்லாததால், யாரும் இதைத் தொடர்ச்சியாக அருந்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
இந்தச் சர்ச்சைக்கு பிறகு நடிகை நயன்தாரா தன் பதிவை நீக்கியுள்ளார். முன்னதாக, இதே மருத்துவர் தான் நடிகை சமந்தாவின் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு தொடர்பான பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.