For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கை பானங்கள்!

12:31 PM May 01, 2024 IST | Web Editor
கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கை பானங்கள்
Advertisement

கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கையான பானங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.  கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.  இந்த நிலையில், கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கையான பானங்களைப் பற்றி இங்கு காணலாம்.

மோர்

தயிருடன் நீர் சேர்த்து நன்றாக கலக்கி வெண்ணெய்யை வடிகட்ட, நமக்கு மோர் கிடைத்துவிடும்.  பின்னர் மோரில் இஞ்சி, புதினா, மிளகாய் அல்லது அதற்கு பதிலாக சிறிதளவு மிளகுத்தூள், வறுத்த பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் குடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது.

மேலும் மோரில் புரதம், கால்சியம், விட்டமின் பி12, ரிபோஃபிளேவின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.  மோர் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது.  மோரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.  குறைந்த கலோரி கொண்ட மோர் அருந்துவதால் நம் உடல் எடை குறையும்.

இளநீர்

இளநீரில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன. இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்க உதவுகிறது.  இதில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், சோடியம் மற்றும் மாங்கனீசு உள்ளன. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.இளநீரின் சத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்கவேண்டுமெனில் வழுக்கையோடு சேர்த்து குடிக்க வேண்டும். இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன.

எலுமிச்சை பழச்சாறு

எலுமிச்சை பழச்சாற்றில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து, புதினா இலை இரண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.  எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.  இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.  இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

நன்னாரி சர்பத்

நன்னாரி வேர்களை நன்கு சுத்தம் செய்து பொடி செய்து,  தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.  வடிகட்டிய நன்னாரி தண்ணீரில் சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி எடுக்க வேண்டும்.  தேவையான வேளைகளில் இந்த நன்னாரி சர்பத்தில் தண்ணீர் கலந்து குடிக்கவும்.  இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், சிறுநீர் நன்றாக வெளியேறும்.

தர்ப்பூசணி பழச்சாறு

தர்ப்பூசணி பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது தர்ப்பூசணி பழத்தின் சாற்றை குடிக்கலாம்.  தர்பூசணியில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் உள்ளன.  தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை உடனே தீரும்.  தர்பூசணியில் 92% நீர்ச்சத்து உள்ளது.

வில்வப்பழ சர்பத்

வில்வ பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் நாட்டு வெல்லம் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து மணப்பாகு பதத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  தேவையான போது இதிலிருந்து 5 முதல் 10 மில்லி அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து குடிக்கவும்.  இது வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற சிறந்த பானமாகும்.  இது உடலுக்கு  குளிர்ச்சியையும், குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்.  மேலும் குடல் புண்களையும் குணப்படுத்தும்.

பதநீர்

பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கின்ற பானம்.  பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரை, சுண்ணாம்பு தடவிய மண் பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இந்தத் திரவமே பதநீர்.  இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளது.  இது எலும்புக்கு நல்ல பலத்தையும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

பானகம்

புளியை தண்ணீரில் கரைத்து அதனுடன் வெல்லத்தை கரைக்கவும்.  பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, சுக்கு, ஏலக்காய், மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.  அதனுடன் புதினா இலை, துளசி இலையை போடவும்.  பின்னர் அந்த பானக்கத்தை குடிக்கவும்.  இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

செம்பருத்தி மணப்பாகு

செம்பருத்தி இதழ்களை அரைத்து, அதனுடன் தண்ணீர் கலந்து தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  மணப்பாகு பதம் வந்தவுடன் ஆற வைத்துக் கொள்ளவும்.  தேவைப்படும் போது இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை கலந்து குடிக்கவும்.  இது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.  உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.  மேலும், இதயத் தசைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

பழைய சாதம்

சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும்.  இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இதில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.  இது உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.  பழைய சாதத்துடன், மோர், சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் துவையல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பார்லி தண்ணீர்

பார்லியை நன்றாக கொதிக்க விட்டு,  ஆற வைத்து குடிக்கவும்.  இதன் மூலம் கோடை காலங்களில் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் நீங்கும்.  சிறுநீரக கற்களை வெளியேற்றும் திறன் கொண்டது.  மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் சர்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

சீரக கொத்தமல்லி பானம்

சிறிதளவு சீரகம் மற்றும் கொத்தமல்லியை எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து,  ஆற வைக்கவும்.  பின்னர் ஆறிய பின் குடிக்கவும்.  இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.  அதனுடன் பித்தம் மற்றும் உடல் உள் உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றும்.

லஸ்ஸி

தயிர் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.  இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை கிடைக்கிறது.

முலாம்பழச்சாறு

முலாம் பழத்திலிருந்து சாறை எடுத்து குடிக்கலாம்.  இப்பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது.  இது உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது.  சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.  இதன்மூலம் உடல் குளிர்ச்சியடைவதுடன் சிறுநீர் கடுப்பு நீங்கும்.

கரும்புச்சாறு

கரும்புச் சாறுடன் சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.   இது உடல் சூட்டை தணிக்கும்.  மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு இது நல்லது.  இதனை குடிப்பதன் மூலம் ஜீரண சக்தி மேம்படும்.

Tags :
Advertisement