#NationalAirForceDay - பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து!
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, விமானப்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினாவில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளாக பங்கேற்ற நிலையில், லிம்கா சாதனை புத்தகத்திலும் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) தாம்பரத்தில் விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விமானப்படை தினத்தையொட்டி, விமானப்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
“இந்தியாவின் துணிச்சல்மிகுந்த விமான வீரர்களுக்கு விமானப்படை தின வாழ்த்துகள். வீரத்திற்கும், தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நம் விமானப்படை விளங்குகிறது. நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கு மிகவும் பாராட்டுதற்குரியது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
இந்திய விமானப்படையின் துணிச்சல்மிக்க வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் ஒப்பில்லா அர்ப்பணிப்பு, நமது வான்பரப்புகளை பாதுகாக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும், தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.